
காரிகையே உன்னில் எதில் மயங்கினேன் நான்
சிரிக்கும்போது கண்ணருகில் சுருங்கும் சுருக்கத்திலா?
இதழ் விரிக்கும்போது கன்னத்தில் சுழித்துவிழும் குழியழகிலா?
நீ பார்க்கும்போது கருவிழிகள் கவிதை பாடுவதிலா?
நோய் தீர்க்கும்போது மருந்தாக உன் பார்வை இருந்ததிலா?
நடை பயிலும்போது அன்னத்தின் சாயல் தெரிவதிலா?
இடை துவளும்போது மின்னலின் சாயல் தெறிப்பதிலா?
தலை கவிழும்போது மலர்தாமரை நினைவு வருவதிலா?
உனைத் தழுவும்போது மலரிதழின் மென்மை உணர்வதிலா?
துள்ளி ஓடும்போது புள்ளிமானின் துள்ளல் பார்ப்பதிலா?
இசை பாடும்போது நீலக்குயிலின் இனிமை கேட்பதிலா?
எனை தேடும்போது கண்ணில் ஏக்கம் தங்குவதிலா?
எனை நாடும்போது விண்வரை மகிழ்ச்சி பொங்குவதிலா
எனைப் பிரியும்போது கண்ணோரம் துளிர்க்கும் நீர்த்துளியிலா?
கண்ணில் தெரியும்போது இதழோரம் துளிர்க்கும் குறுநகையிலா?
காலைஎழும்போது உன்னில் கதிரவன் தெரிவதிலா?
நிலவு எழும்போது உன்னில் விண்மீன் ஒளிர்வதிலா?
நீ பேசும்போது சப்தஸ்வரம் த்வனிப்பதிலா?
மணம்வீசும்போது மலரில் உன் வாசம் வீசுவதிலா?
மயன்தூரிகையே...ரவிவர்மன் கை படாத காவியமே ..
இளம் காரிகையே ..உன்னில் எதில் மயங்கினேன் நான்?
பாடல்: கீதாதெய்வசிகாமணி
Labels: poem
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home